Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

ஈரோடு மாவட்டத்தில் - குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 34 குழுக்கள் அமைப்பு : மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தகவல்

ஈரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் நேற்று 'காக்கும் கரங்கள்' என்ற திட்டத்தை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரச்சார நோட்டீசை அவர் வெளியிட்டார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை சார்பில், காக்கும் கரங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாகவும், பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும் தினமும் வழக்குகள் பதிவாகி வருகிறது. இதன்பேரில், நடப்பாண்டில் மட்டும் இதுவரை 14 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் 128 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை, சைல்டுலைன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகநலத்துறை உள்ளிட்டவர்களைக் கொண்ட 34 குழுக்கள் அமைக்கப்பட்டு குழந்தைத் திருமணம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தில் எஸ்எஸ்ஐ தாக்கியதில் விவசாயி முருகேசன் இறந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே எஸ்எஸ்ஐ மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். பொது மக்களை காப்பதற்காகத்தான் காவல்துறை உள்ளதே தவிர அடிப்பதற்காக அல்ல. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்தாய்வு

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை பேசும்போது, ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 359 புகார்கள் வந்தன. இந்த ஆண்டு 160 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து குழந்தைகள் மீட்கப்படுகின்றனர். தற்போது மாணவ, மாணவியருக்கு நடக்கும் ஆன்லைன் வகுப்புகளின்போது, குழந்தைத் திருமணம் குறித்த கவுன்சலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

டிஐஜி முத்துசாமி பேசும்போது, குழந்தைத் திருமணத்தில் உலக அளவில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிகமாக குழந்தைத் திருமணங்கள் நடக்கும் மாநிலமாக பிஹார் உள்ளது. அங்கு 80 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் மோசமாக இல்லை. இதற்கு காரணம் தமிழ் சமுதாயத்தில் உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது, என்றார். நிகழ்ச்சியில் ஈரோடு எஸ்பி சசிமோகன் உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x