தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள  -  வக்பு வாரிய சொத்துக்களை  தமிழக அரசு மீட்க வேண்டும் :  சிதம்பரம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள - வக்பு வாரிய சொத்துக்களை தமிழக அரசு மீட்க வேண்டும் : சிதம்பரம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

Published on

சிதம்பரம் வட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரம் நகர தலைவர் முகமது ஜியாவுதீன் தலைமையில் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் சிதம்பரம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முகமது ஜியாவுதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 30 நாட்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தினங்களுக்குள் கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தமிழக முதல்வரை பாராட்டுகிறோம்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுபோலவே இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்தில் 50 சதவீத சொத்துக்கள் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜமாத் சொத்துக்கள், பள்ளிவாசல் சொத்துக்கள் போன்றவை பலரது ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனால் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை போலவே வக்பு வாரியத்திலும் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். சிதம்பரம் தாலுகாவில் மட்டுமே சுமார் 50 சதவீத வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. வக்பு வாரிய சொத்துக்களை மீட்க தமிழக அரசு முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in