

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
2021- 22-ம் ஆண்டுக்கு திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.4.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப் புறமாக இருந்தால் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.
கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண் களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலை யங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் ரூ.30 லட்சம் வரை மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர், கடன் விண்ணப்பங்களை பெற்று, நிறைவு செய்து உரிய ஆவணங் களுடன் விண்ணப்பிக்கலாம்.