

விரும்பும் துறையைத் தேர்ந் தெடுத்தால் வெற்றி எளிது என மாணவர்களுக்கு செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அறிவுறுத்தினார்.
திருச்சி சந்தானம் வித்யா லயா(சிபிஎஸ்இ) சார்பில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் காணொலிக் காட்சி வாயிலாக மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பள்ளியின் செயலாளர் கே.மீனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். பள்ளி இயக்குநர் அபர்ணா முன்னிலை வகித்தார்.
செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது: ஒவ்வொரு முறை விளையாடும்போதும் செய்யத் தவறிய விஷயங்களை அடுத்த முறை அதை தவறவிடக் கூடாது என்பதற்காக உடனுக்குடன் குறிப்பெடுத்துக் கொள்வேன்.
செஸ் விளையாட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண் டும். அப்போது தான் வெற்றிபெற முடியும். போட்டிகள் முடிந்து வீடு களுக்கு திரும்பும் போதும் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்காமல் சிந்தனையை புதுப்பித்துக் கொள்வேன்.
விடா முயற்சியும், தளராத உழைப்பும், தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத மனப்பான்மையும் கொண்டிருந்தால் நம் இலக்கை அடையலாம். ஆனால் நாம் விரும்பும் துறையில் முயற்சிகளை மேற்கொண்டால், வெற்றியை நோக்கி முன்னேறுவது எளிதாக இருக்கும் என்றார்.
மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் பதிலளித்தார். சிறந்த கேள்வியை கேட்ட மாணவர் களுக்கு மைன்ட் மாஸ்டர் நூலை பரிசாக அளிப்பதாக பள்ளி தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளியின் முது நிலை முதல்வர் பத்மா சீனிவாசன் வரவேற்றார். நிறைவாக முதல்வர் வி.பொற்செல்வி நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, சங்கரா மெட்ரிக் பள்ளி, சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, மதி இந்திராகாந்தி கல்லூரி, தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, அகிலாண்டேஸ்வரி வித்யாலயா, ராஜாஜி வித்யாலயா மற்றும் மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.