

அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் மத்திய மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.தங்கதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் அ.பழநிசாமி, மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் ஊதிய செலவினத்தை சாதி வாரி யாக பிரித்து தொகுக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஊதியம் வழங்குவதைப் பாதிக்கும். எனவே, ஊதியம் வழங்குவதில் புதிய பகுப்பாய்வு முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமையில், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாகையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முருகையன் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலை, அரவக்குறிச்சியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.