

சேலம் மாவட்டத்தில் 127 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப் பட்டது. கடந்த 2 நாட்களாக தடுப் பூசி தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், நேற்று மக்கள் அனைத்து மையங்களிலும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது. இதனால், தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போது தடுப்பூசி போடப்படும் மையங்கள், சுகாதாரநிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, தடுப்பூசிபோடப்படும் நேரம் உள்ளிட்டவை களை முன் கூட்டியே அறிவித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால், தடுப்பூசி மையங் களில் நெரிசல் ஏற்படுவதும், இருப்பு இல்லை என்ற ஏமாற்றமும் தடுக்கப்பட்டு, பிரச்சினையின்றி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில், தடுப்பூசி போடப்படும் 127 மையங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றில் மொத்தம்22 ஆயிரத்து 230 டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் 2 வார்டுகளுக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைத்தும், ஊரகப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மையங்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது. நேற்று தடுப்பூசி மையங்களுக்கு காலையிலேயே மக்கள் திரண்டு வந்தனர்.
தடுப்பூசி இருப்பு எண்ணிக் கைக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டன. டோக்கன் பெற்றவர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.