

தூத்துக்குடியில் வியாபாரியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்த பொய்யாமொழி மகன் ரவி என்ற பொன்பாண்டி (38). இவர், அப்பகுதியில் டீக்கடை மற்றும் செருப்புக்கடை வைத்துள்ளார். கடந்த 18-ம் தேதி மாலை கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
வீட்டருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் பொன்பாண்டியை வழிமறித்து, ஆயுதங்களால் தாக்கினர். அவரது சத்தம் கேட்டு, சகோதரர்கள் அங்கு வந்ததையடுத்து 4 பேரும் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பொன்பாண்டி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸார் விசாரணை நடத்தியதில் தொழில் போட்டி காரணமாக இச்சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அஜித்குமார் (26), தாழையூத்து கட்டாம்புளி ஜெயக்குமார் மகன் ஜெரின் (23), தருவைக்குளத்தைச் சேர்ந்த தங்கபழம் மகன் அந்தோணி சதீஸ் (42), அம்பாசமுத்திரம் இந்திரா நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் அலெக்ஸ் பாண்டியன் (29), தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் தலைவன்வடலியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (21), தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதி ராஜா (35), எட்டயபுரம் சாலையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முகேஷ் ராஜா என்ற ராசுக்குட்டி (25) ஆகிய 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 அரிவாள், 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.