Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

ஏலகிரி மலையில் மின்வாரிய அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் பணிகள் தொடங்கவில்லை: மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு

திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் புதிதாக மின்வாரிய அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டு கடந்த நிலையில் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப் படாமல் இருப்பது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக மலைவாழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் ஏலகிரி மலையில் அத்தனாவூர், நிலாவூர், மங்களம் உட்பட 14 மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி வாழ் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணம் மற்றும் மின்சாரம் தொடர்பான புகாரை தெரிவிக்க வேண்டுமென்றால், மலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் பகுதியில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று தான் தெரிவிக்க வேண்டும் என்ற நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏலகிரி மலையிலேயே மின்வாரிய அலுவலகம் (கிளை) ஒன்றை திறக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்ற தமிழக அரசு ஏலகிரி மலையில் மின்வாரிய அலுவலகம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தது.

நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டு கடந்த நிலையில் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப் படாததால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மலை வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மலை வாழ்மக்கள் கூறும்போது, ‘‘ஏலகிரி மலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மின் வாரிய அலுவலகம் ஒன்று மலையிலேயே அமைத்துத் தர வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஏலகிரி மலையில் மின் வாரிய அலுவலகம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப் படுவதாக தமிழக அரசு அறிவித் தது. இதைத்தொடர்ந்து, ஜோலார் பேட்டை ஒன்றியம் சார்பில் ஏலகிரி மலையிலும், ஆலங்காயம் ஒன்றியம் சார்பில் காவலூர் பகுதியிலும், திருப்பத்தூர் ஒன்றி யம் சார்பில் ஜவ்வாதுமலை என மொத்தம் 3 இடங்களில் புதிதாக மின்சார அலுவலகம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது.

மின் வாரிய அலுவலகம் அமைக்க இடமும் தேர்வு செய் யப்பட்டது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை. இடம் தேர்வு செய்யப்பட்டதோடு சரி எந்த பணிகளும் அதன்பிறகு நடைபெறவில்லை.

மின் வாரிய அலுவலகம் அமைப்பதற் காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாக்கப் பட்டுள்ளது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் அதற்கான பணிகள் தொடங்காதது வருத்த மளிக்கிறது. எங்கள் கோரிக்கையை மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழக அரசும் அதற்கான நடவடிக்கையை விரைவாக தொடங்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏலகிரிமலையில் மின்வாரிய அலுவலகம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப் பட்டன. அதற்குள்ளாக கரோனா பெருந்தொற்றால் அடுத்தடுத்த பணிகள் தொடங்க முடியாமல் போனது. தற்போது, கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்குள்ளாக 10 நாட்களுக்கு மின் பராமரிப்புப்பணிகள் தொடங்கி யுள்ளோம். இப்பணிகள் விரைவாக முடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, மின்பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு ஏலகிரி மலையில் மின் வாரிய அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் தொடங்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x