

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் 23 பகுதிகள் தென் மேற்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு துணை ஆட்சியர்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. வட்ட அளவில் வட்டாட்சியர் தலைமையில், வட்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நீர் நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாக்கடை உள்ளிட்ட நீர் வழிகளை தூர்வார வேண்டும். சிதிலமடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து பராமரித்தல் அல்லது இடித்தல் உள்ளிட பணிகளை செய்ய வேண்டும். தீயணைப்பு துறையினர் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், அவசர காலங்களில் தேவைப்படும் பொக்லைன், மரம் அறுக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலைகளில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹமான், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜ், உதவி வன பாதுகாவலர் (தலைமையிடம்) யோகேஷ் குமார் மீனா உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.