

அமிர்தி சிறு மிருக வன உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலூர் அருகேயுள்ள அமிர்தி சிறு மிருக வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான், கடை மான், குரங்கு, முதலை, உடும்பு, நரி, மரநாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி நீர்ப்பறவைகள், மயில், கிளிகள், கழுகு, பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா ஊரடங்கு காரணமாக அமிர்தி பூங்காவை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப் பட்டுள்ளது. அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சென்னை வண்டலூர் விலங்கியல் பூங்காவில் கரோனா பாதிப்பால் இரண்டு சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அங்குள்ள பிற சிங்கங்களுக்கு கரோனா தொற்றால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அமிர்தி வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளின் உடல் நிலை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன் விலங்குகள் முறையாக சாப் பிடுகிறதா? என்றும் கால்நடை மருத்துவர்கள் நேற்று முன்தினம் பரிசோதித்தனர்.
மேலும், பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஏதாவது கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர். பூங்காவில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும், விலங்குகளுக்கு உணவு கொடுப்பவர்கள் காலை மற்றும் மாலையில் அதன் செயல்பாடு குறித்து கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், முதலை மற்றும் நரிக்கு வழங்கப்படும் இறைச்சியை சுடுநீரில் சுத்தம் செய்த பிறகே வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கரோனா தடுப்பூசி