சேலம் அழகாபுரத்தில் நேற்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களிடம் கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்.படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் அழகாபுரத்தில் நேற்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களிடம் கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்.படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம் மாவட்டத்தில் இதுவரை - கரோனா தடுப்பூசி 13.3% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது : ஆட்சியர் கார்மேகம் தகவல்

Published on

சேலம் மாவட்டத்தில் இதுவரை 13.3 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிகள், ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட 122 மையங்களில் நேற்று தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. சேலம் அழகாபுரத்தில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாநகராட்சி பகுதியில் இரு வார்டுகளுக்கு ஒரு தடுப்பூசி மையம் என்ற அளவில் கூடுதலாக முகாம் அமைக்கப்பட்டு 30 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 92 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 122 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் முடிந்த அளவு தங்கள் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 13.3 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 2 நாள் இடைவெளியில் வருவதால், தேவையான தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, தடுப்பூசி இல்லை என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜ், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in