Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

விழுப்புரம் புறவழிச்சாலையில் - திருக்கோவிலூர் அணுகு சாலை அமைக்க அனுமதி : அமைச்சர் பொன்முடி ஆய்வு

விழுப்புரம் புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் அணுகு சாலை அமைக்க அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அருகில் ஆட்சியர் மோகன் உள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் அணுகு சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2008-ம் ஆண்டில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் புறவழிச்சாலையில், திருக்கோவிலூர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ரயில்வே மற்றும்சாலை மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக திருக்கோவிலூரிலிருந்து வரும் வாகனங்கள் சென்னை மார்க்கத்தில் செல்வதற்கு வழியில்லாமல் போனது.

திருக்கோவிலூர் வாகனங்கள் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பிற்கு வந்து பின்னர் புதிய பேருந்து நிலையம், எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக சுற்றிக்கொண்டு புறவழிச்சாலையை கடந்து சென்னை, திருச்சி மார்க்கம் செல்லவேண்டிய நிலை உள்ளது. புறவழிச்சாலையை திருக்கோவிலூர் சாலையோடு இணைக்கும் வகையில் அணுகு சாலையை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தற்போது ஒப்புதல் வந்துள்ளது. பணிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியது:

மத்திய அமைச்சராக டி.ஆர் பாலு இருந்தபோது, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில், விழுப்புரம் புறவழிசாலையில் திருக்கோவிலூர் அணுகுசாலை அமைக்க கோரிக்கை வைத்தோம். இதனை வலியுறுத்தி கடந்த2 ஆண்டுகளுக்கு முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்போது, அந்தத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது. 2 பக்கமும் 90 அடிஅகலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விரைவில்இப்பணிகள் முடிவடைந்து,நெடுஞ்சாலைத்துறை அமைச்சரால் திறப்புவிழா நடைபெறும் என்று தெரிவித்தார்.

முன்னதாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி சங்கத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டிற்காக ரூ. 25 லட்சம் மதிப்பிட்டில் 9 ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் , பாலாஜி நகரில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து கரோனா நிவாரணம் ரூ.2,000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை பொருட்கள் தொகுப்பை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் மோகன், எஸ்பி நாதா விழுப்புரம் எம்பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x