

திருச்சி அருகே அதிமுகவினரிடமிருந்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சாமி ரவியை தனிப்படை போலீஸார் நேற்று அருப்புக்கோட்டை அருகே கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை பகுதியில் கடந்த மார்ச் 23-ம் தேதி இரவு ஒரு காரில் இருந்த ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்தக் கார், முசிறி தொகுதி அப்போதைய எம்எல்ஏவும், அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவருமான செல்வராசுவின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என தெரியவந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என காரில் இருந்த அதிமுகவினர் தெரிவித்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேட்டைவாய்த்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், ஜீயபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.3 கோடி பணத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் பெற்றுக் கொண்டு வரும் வழியில் ஒரு கும்பல் அந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்று, அதில் ரூ.2 கோடியை மட்டும் அந்த கும்பல் பறித்துச் சென்றதும், மீதமுள்ள ரூ.1 கோடியை போலீஸார் பறிமுதல் செய்ததும் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்துக்கு திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி சாமி ரவி மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சாமி ரவியை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், அருப்புக்கோட்டை பகுதியில் பதுங்கி யிருந்த ரவுடி சாமி ரவியை இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரவுடி சாமி ரவி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.