ஈரோடு சோதனைச் சாவடிகளில் - இ-பதிவு இன்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு :
ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில், வாகனத்தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார், இ-பதிவு இல்லாத வாகனங்களைத் திருப்பி அனுப்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முகக் கவசம் அணியாமல் வந்த 243 பேருக்கு தலா ரூ.200 அபராதம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 498 இருசக்கரவாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று ஒரு நாளில் ரூ.3.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி மற்றும் நொய்யல் சோதனைச்சாவடிகளில், வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, இ-பதிவு உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. இதே போல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களை அனுமதிக்காமல், போலீஸார் திருப்பி அனுப்பினர்.
