

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் 15 ஆயிரத்து 600 கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டன. அதே நேரத்தில் நேற்று மாநகரில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படவில்லை.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, தடுப்பூசி மருந்து வருவது தாமதமானால், தடுப்பூசி போட வரும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நேற்று தடுப்பூசி போடுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. தற்போது மருந்து கையிருப்பு உள்ளதால் இன்று (17-ம் தேதி) மாநகராட்சி பகுதியில் உள்ள அகத்தியர் வீதி, காந்திஜி சாலை, ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம், பிராமண பெரிய அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், நேதாஜி சாலை, சூரம்பட்டி, சூரியம்பாளையம், பெரிய சேமூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகிறது
ஒவ்வொரு மையத்திலும் தலா 200 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசி போடப்படும். இதற்கான டோக்கன் இன்று காலை 8 மணிக்கு வழங்கப்படும்.
இவ்வாறு கூறினர்.