

ஈரோட்டில் ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று தடுப்பூசி போடப்படாத நிலையில் இன்று தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி 13 ஆயிரத்து 840 கரோனா தடுப்பூசி மருந்து வந்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 69 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்தது. இருப்பு தீர்ந்த நிலையில், மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ், 13-ம் தேதியன்று 18 ஆயிரத்து 190 தடுப்பூசி மருந்துகள் ஈரோட்டுக்கு வந்தடைந்தன.
இதையடுத்து அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன்படி 14-ம் தேதி மட்டும் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 235 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி இருப்பு 2610 ஆக குறைந்தது. இதனால், நேற்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக தடுப்பூசி மையங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டதால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டம் என்ற முன்னுரிமை அடிப்படையில், அதிக அளவு தடுப்பூசிகளை ஈரோட்டுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.