

பொதுமக்கள் வருவாய் தீர்வாய மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றுகடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1430-ம் பசலி
ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் நாளை (ஜூன் 17) முதல் நடைபெறுகிறது. குறிஞ்சிப்பாடியில் மாவட்ட ஆட்சியர், திட்டக்குடியில் மாவட்ட வருவாய்அலுவலர், காட்டுமன்னார்கோவிலில் சிதம்பரம் சார்-ஆட்சியர், சிதம்பரத்தில் விருத்தாசலம் சார்-ஆட்சியர், கடலூரில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர், சிதம்பரத்தில் கடலூர் உதவிஆணையர் (கலால்), பண்ருட்டியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், முஷ்ணத்தில் மாவட்ட மேலாளர் (தாட்கோ), புவனகிரியில் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூரில் நெய்வேலி தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) ஆகியோர் தீர்வாய அலுவலர்களாக இருந்து நடத்தப்பட உள்ளது.
வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெறும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. ஆயினும் பொதுமக்கள் தங்களது வருவாய் தீர்வாய கோரிக்கை மனுக்களை https:// gdp.tn.gov.in/jamabandhi இணையதளத்தில் கணினி மூலமாக அல்லது தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தின் மூலமாக 31.07.2021 வரை பதிவு செய்யலாம். பொதுமக்கள் பட்டா மற்றும் இதர நலத்திட்ட கோரிக்கைகள் தொடர்பாக வருவாய் தீர்வாய மனுக்களை இ-சேவை மையத்தில் இணைய வழியில் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதி அடிப்படையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
இ-சேவை மையத்தின் மூலமாக 31.07.2021 வரை பதிவு செய்யலாம்.