

புதுச்சேரியில் கரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த 7-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. மதுக்கடை உட்பட அனைத்து கடைகளையும் காலை 9 முதல் மாலை5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. பேருந்து, ஆட்டோ, டாக்சிகள்உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-ம்தேதி முடிவடைய உள்ள நிலையில், நேற்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன்-21 ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு நேற்று முன்தினம் நள்ளிரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ஏற்கெனவே உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் 50 சதவீத இருக்கைகளை கொண்டு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வகை அனுமதி பெற்ற உணவகங்களுடன் கூடிய மதுபான விடுதிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில்லரை வகை மதுபான கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களுக்கு அனுமதி தரப்படவில்லை. மேலும்அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டதை அலுவலகங்களும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்த்ரவிடப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் அவர்களின் கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்படும். மதுபானங்களை வீட்டுக்குச் சென்று விநியோகிக்க கலால்துறை விரைவில் வழி முறைகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.