

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 63-வது வார்டு பகுதியில் மந்தகதியில் நடைபெறும் புதைசாக்கடைத் திட்டப் பணிகளால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் 2-வது மற்றும் 3-வது கட்ட புதைசாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 63-வது வார்டு பகுதியான திருவெறும்பூர் அருகிலுள்ள பிரகாஷ் நகர், எறும்பீஸ்வரர் நகர், கார்முகில் கார்டன், பாலாஜி நகர் என பல்வேறு குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் புதைசாக்கடைத் திட்டப் பணியில் குழாய் பதிப்பதற்காக அண்மையில் பள்ளம் தோண்டப்பட்டு இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் சிறு மழை பெய்தாலும் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
கடந்த இருதினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் அந்த பகுதி சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘புதைசாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இந்த பகுதியில் சாலை வசதியை பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அமைக்க வேண்டும்’’ என்றனர்.