

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி போடப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அதிகாலையிலேயே கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.
மருந்து தட்டுப்பாடு நிலவிய நிலையில், கடந்த 12-ம் தேதி சேலம் மாவட்டத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 18 ஆயிரத்து 100 டோஸ் வந்தது. இதையறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை உருவானது.
சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் திரண்டு நின்ற அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அங்கு வந்து மக்களுக்கு அறிவுரை கூறி, அவர்களை வரிசைப்படுத்தினர்.
இதுதொடர்பாக ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், ‘மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, மக்கள் கூட்டமாக வருவதைத் தவிர்த்து, பொறுமையாக வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி வருகைக்கு ஏற்ப, தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்படும். யாரும் அவசரப்பட வேண்டியதில்லை’ என்றார்.
இதனிடையே, மாவட்டத்தின் சில மையங்களில், இரண்டாவது தவணை போடுவதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், அங்கு சுகாதாரத்துறை ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.