Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM

தனது பெயரில் போலி ‘ட்விட்டர்’ பக்கம் - காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார் :

சென்னை

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி, அதன் மூலம் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் செந்தில், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர் நடிகர் செந்தில். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்தார். அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் தலைமையை ஏற்று, அமமுகவுக்கு சென்றார். அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், நடிகர் செந்தில் தனது வழக்கறிஞருடன் சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று பிற்பகல் வந்தார். அங்கு மத்திய குற்றப் பிரிவு காவல் கூடுதல் ஆணையர் பி.தேன்மொழியிடம் புகார் மனு அளித்தார்.

அதில், "நான் தமிழ் திரைப்படத் துறையில் 40 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த 12-ம் தேதி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சில விஷக்கிருமிகள் ட்விட்டர் பக்கத்தில் எனது பெயரில் போலி கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும், அதன் மூலம் தமிழக அரசு மீதும், தமிழக முதல்வர் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.

இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கண்டறிந்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், அந்த போலி ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் செந்தில் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சைபர் க்ரைம் போலீஸாருக்கு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடிகர் சார்லி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. புகார் அளித்த அரை மணி நேரத்தில் சைபர் க்ரைம் போலீஸார் அந்தக் கணக்கை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x