

மேட்டூர் அணை திறக்கப்பட் டுள்ளதால் வீராணம் ஏரிக்கு இந்த மாதத்தில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடாவறு வழியாக தண்ணீர் வந்து சேரும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் உள்ள 45 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மராமத்து பணிக்காக ஏரியில் இருந்த தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு இந்த மாத இறுதிக்குள் தண்ணீர் வந்து சேரும். அதன் பின்னர் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும். விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும்" என்று தெரிவித்தனர்.