

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜனவரி வரை தண்ணீர் திறக்கப்படும். அப்போது மேட்டூர் அணையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மூலம் 50 மெகா வாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.
இதேபோல, காவிரியின் குறுக்கே மேட்டூர் தொடங்கி ஈரோடு மாவட்டம் வரை ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள 7 கதவணைகள் மூலமாக 510 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல்வர் ஸ்டாலின், டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து வைத்தார்.
படிப்படியாக நீர்திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, மின்நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால், தற்போது சராசரியாக 300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நீர் திறப்பு அதிகரிக்கும்போது, மின் உற்பத்தியும் அதிகரிக்கும்” என்றனர்.