Published : 13 Jun 2021 03:14 AM
Last Updated : 13 Jun 2021 03:14 AM

ஆற்காடு அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுபானங்கள் திருடிய சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது: உயர்ரக இரு சக்கர வாகனம் பறிமுதல்

ரத்தினகிரி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து உயர்ரக இரு சக்கர வாகனம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆற்காடு

ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை திருடிய வழக்கில் சகோதரர்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மதுபாட்டில்களை விற்று வாங்கிய உயர்ரக இரு சக்கர வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்களுடன் 206 மதுபாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் கடந்த 9-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான 48 பெட்டி மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் மகாராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் 3 தனிப் படை அமைக்கப்பட்டு மதுபாட்டில் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையில், சில்லறையில் மதுபாட்டில் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தனிப்படை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (43) என்ப வரை தனிப்படை காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இவர் மீது 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரது வீட்டில் சோதனையிட்டதில் 206 மதுபாட்டில் கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இவை அனைத்தும் ரத்தினகிரி அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையில் திருடியதை மணிகண்டன் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த திருட்டு சம்பவத்துக்கு கலவை அருகேயுள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான சந்தானம் (26), ராமதாஸ் (21) ஆகியோர் உடந்தை என்றும் தெரியவந்தது. அவர்களையும், காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு வாலாஜா காவல் துறையினரால் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன், மணல் கடத்தல் வழக்கில் சந்தானம் கைதாகி சிறைக்கு சென்றார். இருவரும் ஒரே பகுதியில் இருந்தபோது ஏற்பட்ட பழக்கம் வெளியில் வந்தபோதும் தொடர்ந்துள்ளது. திருட்டு தொழிலில் சந்தானத்தை முதலில் மணிகண்டன் ஈடுபடுத்தியுள்ளார்.

இதில், அதிகம் பணம் வந்ததும் தனது தம்பி ராமதாசையும் சந்தானம் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளார். மூவரும் சேர்ந்து டாஸ்மாக் மதுபானக் கடைகளில் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மதுபானக் கடையில் திருடும் மது பாட்டில்களை மொத்தமாக விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர். காவேரிப்பாக்கம் டாஸ்மாக் மதுபான கடையில் சில மாதங் களுக்கு முன்பு நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் இவர்கள் மூவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், ரத்தினகிரி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விற்ற பணத்தில் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் விலையுள்ள உயர்ரக இரு சக்கர வாகனத்தை இரு தினங்களுக்கு முன்புதான் சந்தானம், ராமதாஸ் ஆகியோர் வாங்கியுள்ளனர். உல்லாசமாக ஊர் சுற்ற வாங்கிய அந்த வாகனத்துடன் மேலும், இரண்டு இரு சக்கர வாகனங்களையும் 206 மதுபாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x