

ஒடிசா மாநிலத்தில் இருந்து சேலத்துக்கு சரக்கு ரயிலில் 86.22 மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் நேற்று வந்தது.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவமனை களுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது.
தென்னக ரயில்வே சார்பில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில், டேங்கர் களில் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தென்னக ரயில்வே மூலம் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்துக்கு இதுவரை 5007.83 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவில் இருந்து, சரக்கு ரயில் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை சரக்கு ரயில் நிலையத்துக்கு, 4 டேங்கர்களில் 86.22 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.