

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை ரேஷன் கடைகளில் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஒரு நாளுக்கு 200 பேருக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடைக்கு வரவேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 788 ரேஷன் கடைகளில் வரும் 15-ம் தேதி முதல் நிவாரண தொகையும், பொருட்களும் வழங்கப்படவுள்ளன.