Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

ஈரோட்டில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைகிறது : அரசு மருத்துவமனைகளில் 345 படுக்கைகள் காலி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1390 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1990 பேர் குணமடைந்த நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 102 ஆகக் குறைந்துள்ளது.

ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி ஆகிய 7 அரசு மருத்துவமனைகளில் 1387 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடுமுடி மருத்துவமனையில் தற்போது படுக்கைகள் காலியாக இல்லை. சத்தியமங்கலத்தில் ஒரு படுக்கையும், அந்தியூரில் 9 படுக்கையும், கோபியில் 18 மற்றும் பவானியில் 19 படுக்கைகளும் காலியாக உள்ளன.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 98 படுக்கைகளும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகள் என மொத்தம் 345 படுக்கைகள் காலியாக உள்ளன.

இதுதவிர 48 தனியார் மருத்துவமனைகளில் 747 படுக்கைகளும், கரோனா சிறப்பு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2279 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9533 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், மாவட்ட அளவில் 158 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 9-ம் தேதி வரை 7 லட்சத்து 65 ஆயிரத்து 325 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 580 பேரும், 44 வயதுக்கு கீழ் உள்ள 46 ஆயிரத்து 670 பேரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மருந்து இல்லாததால், தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x