

சேலம்: மேட்டூர் உபரி நீர் திட்டப்பணிகளை சேலம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் வறண்ட நிலையில் உள்ள 100 ஏரிகளை நிரப்ப ரூ.565 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மேட்டூர் அணையை அடுத்துள்ள திப்பம்பட்டியில் அமைக்கப்படும் தலைமை நீரேற்று நிலையத்தின் மூலம் மேட்டூர் அணை உபரி நீரை குழாய் மூலம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, சில இடங்களில் துணை நீரேற்று நிலையங்கள் மூலம் 100 ஏரிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள் மற்றும் 83 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் உள்ளிட்ட 100 ஏரிகளின் பாசனப் பரப்பான 4,238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இத்திட்டத்துக்காக, மேட்டூர் திப்பம்பட்டியில் அமைக்கப்படும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகளை சேலம் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.