Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

தனியார் பார்கள் திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் : தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

தனியார் பார்கள் திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் தற்போது 5,198 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளுடன் அதிகாரப்பூர்வமாக 2,050 பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்து மதுக்கடைகளிலும் பார்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை மூடிவிட்டு, வேறு இடங்களில் தனியார் மூலம் பார்களைத் திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் நோக்கத்தில் இத்தகைய திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மிகவும் ஆபத்தானதாகும். தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கும், பல்லாயிரக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து கைம்பெண்களாக வாடுவதற்கும் முதன்மைக் காரணம் இந்த மதுக்கடைகள்தான்.

மதுவிலக்குக்கு ஆதரவாக வாக்குறுதி அளித்த திமுக, இப்போது கூடுதலாக தனியார் பார்களைத் திறக்க முயன்றால் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். அதை பாமகவும், தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் தொழுநோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்கு ஒப்பானது என்று கூறி தமிழ்நாட்டில் மது விற்பனையை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தவர் அண்ணா. அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில், தனியார் பார்கள் அனுமதிக்கப்பட்டால் அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது.

எனவே தனியார் பார்களை திறக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x