Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

40 நாட்களில் 21 முறை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : தள்ளுவண்டியில் ஆட்டோவை ஏற்றி போராட்டம்

40 நாட்களில் 21 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் தள்ளுவண்டியில் ஆட்டோவை ஏற்றி நூதன போராட்டம் நடந்தது.

மத்திய பாஜக அரசு உயர்த்திய பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ, சுற்றுலா வாகனம், பேருந்து, லோடு கேரியர் ஆகிய சங்கங்களின் சார்பில் நேற்று புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு இசிஆர் சாலையில் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஆட்டோ சங்கத் தலைவர் சேகர், நகர பேருந்து தொழிலாளர் சங்கத் தலைவர் மரி கிரிஸ்டோபர், சுற்றுலா வாகன சங்க செயலாளர் தமிழ்மணி, லோடு கேரியர் சங்க செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏஐடியுசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது எரி பொருள் விலை உயர்வை உணர்த்தும் வகையில் ஆட்டோவை தள்ளுவண்டியில் ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

போராட்டம் தொடர்பாக ஏஐடியூசி மாநில பொதுச்செயலர் சேதுசெல்வம் கூறுகையில், "கரோனா பெரும் தொற்று இரண்டாம் அலை காரணமாக மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள். கரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் ஊரடங்குஉத்தரவை பிறப்பித்து வருகிறது. ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்களும் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை மே மாதம் 1-ம் தேதியிலிருந்து ஜுன் மாதம் 9-ம் தேதி வரையிலான 40 நாளில் புதுச்சேரியில் 21 முறை உயர்ந்துள்ளது. தற்போதுபெட்ரோல் 1 லிட்டர் ரூ. 95.81,டீசல் ரூ. 90.08 என விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது" என்றார்.

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதுரபி தலைமை தாங்கினார்.

இதேபோல் விழுப்புரம் காந்தி சிலை அருகில் மாவட்ட செயலாளர் அக்பர்அலி தலைமையிலும், விழுப்புரம் ரயில்நிலையம் அருகில் வட்டார தலைவர் ஹபியுல்லா தலைமையிலும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட பொருளாளர் ஜான்பாஷா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பில்லூரில் வட்டார துணைசெயலாளர் மூர்த்தி தலைமையிலும், விக்கிரவாண்டியில் நகரசெயலாளர் முஸ்தபா தலைமையிலும், திண்டிவனத்தில் மாவட்ட துணை பொதுச்செயலாளர் ரியாஸ்அகமது தலைமையிலும், ரோஷணையில் மாவட்ட பொதுச்செயலாளர் சையதுஉசேன் தலைமையிலும், செஞ்சியில் வட்டார தலைவர் குரைஷி தலைமையிலும் என மாவட்டத்தில் 9 இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x