Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

கல்லணைக் கால்வாய் தூர்வாரும் பணியில் சுணக்கம் : புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட காவிரி படுகை பகுதியில் கல்லணைக் கால்வாய் தூர்வாரும் பணியில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.

கல்லணையில் இருந்து கல் லணைக் கால்வாய் வழியாக வரும் காவிரி நீரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் 168 ஏரிகளில் தேக்கி வைத்து, 25 ஆயிரம் ஏக்கரில் பாசனம் செய்யப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர் வார ரூ.83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசன விவசாயிகளின் ஒருங்கி ணைப்புக் குழுத் தலைவர் அத்தாணி ராமசாமி கூறியது: புதுக் கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாரி மேம்படுத்துவதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதுக் கோட்டை மாவட்டத்தில் ரூ.83 லட்சத்தில் 25.54 கிலோ மீட்டரில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்தால் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 22-ம் தேதிக்கு மேல் தண்ணீர் வந்துவிடும். தற்போது பணிகள் சுணக்கமாகவே நடைபெற்று வருகின்றன. இவற்றை துரிதப்படுத்த வேண்டும். அதேசமயம், பணிகள் முறையாகவும், தரமாகவும் மேற்கொள்ளப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பணிகளை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித் துறையின் கல்லணைக் கால்வாய் பிரிவு பேராவூரணி துணைக் கோட்ட அலுவலர், நாகுடி இளநிலை பொறியாளர், பாசன ஆய்வாளர் போன்ற அலுவலர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றார்.

இதனிடையே, அறந்தாங்கி அருகே அரசர்குளம், ஆயிங்குடி, மங்களநாடு போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை நேற்று முன்தினம் ஆய்வு செய்த சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்குமாறு பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x