

மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஆதரவு விலை போது மானதல்ல என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2020-21-ம் ஆண்டுக்கு குறுவைப் பட்டத்தில் அறுவடையாகும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ரூ.1,868 ஆக இருந்த குவிண்டால் நெல்லின் விலை ரூ.72 உயர்த்தப்பட்டு நிகழாண்டில் ரூ.1,940-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆதரவு விலை போதுமானதல்ல என விவசாயிகள் அதிருப்தி தெரி வித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியது:
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் 2004-ல் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சாகுபடிக்கு ஆகும் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை மத்திய அரசு அந்த அறிக்கையை அமல்படுத்தவில்லை. தற்போது அறிவித்துள்ள விலை போதுமானதல்ல.
காவிரி டெல்டா பாசன விவ சாயிகள் சங்கத்தின் தலைவர் தீட்ஷிதர் பாலசுப்ரமணியன்: தற்போதுள்ள சூழலில் இந்த விலை போதுமானதல்ல. டீசல் விலை உயர்வு காரணமாக டிராக்டர், நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம் ஆகியவற்றின் வாடகை உயர்ந்து விட்டது. இடுபொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்.
காவிரி விவசாயிகள் பாது காப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன்: பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிய நிலையில், மத்திய அரசு நெல்லுக்கான ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு வெறும் ரூ.72 உயர்த்தி அறிவித்துள்ளது யானை பசிக்கு சோளப்பொறி போட்டது போல உள்ளது என்றார்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ஜீவக் குமார்: நாள்தோறும் விவசாய இடுபொருட்களின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் விவசாயிகளின் உற்பத்தி பொருளான நெல் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு மட்டும் உரிய விலை கிடைப்பதில்லை. 100 நாள் வேலை திட்டப்பணிகளால், விவசாயத் தொழிலாளர்களின் தினக்கூலி உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தியுள்ளது, விவசாயத்தின் மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது.
கணபதிஅக்ரஹாரம் முன்னோடி விவசாயி சீனிவாசன்: உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரித்து வருவதால் விவசாயி கள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-க்கு மேல் கேட்டு வரும் நிலையில், மத்திய அரசு வெறும் ரூ.72 உயர்த்தி அறிவித்துள்ளது. விவசாயிகளை மத்திய அரசு பாதுகாக்க தவறி வருவதையே இச்செயல் காட்டுகிறது. இடுபொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நெல்லுக்கான விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.