Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை - தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கோவை தொழில் துறையினர் வரவேற்பு :

கோவை

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், 12 மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பது நம்பிக்கையளிக்கும் நடவடிக்கை என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறும்போது, “கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் மற்றும் வட்டி தள்ளுபடி கோரிக்கையை முழு ஊரடங்குக்கு முன்பிருந்து வலியுறுத்தி வருகிறோம். இரு தினங்களுக்கு முன்புகூட தமிழ்நாடு தொழில் துறை ஆணையர் சி.பி.தாமஸ் வைத்யனுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்தேன்.

தமிழக முதல்வர் எங்களது கோரிக்கையை ஏற்றதுடன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, 12 மாநில முதல்வர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பது பெரிய விஷயம். இதை மத்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். தமிழக முதல்வர் எடுத்துள்ளநடவடிக்கையை தொழில் துறையை காப்பாற்றும் முயற்சியாகவே பார்க்கிறோம். எங்களுக்குநம்பிக்கை அளிக்கும் விஷயமாக வும் உள்ளது” என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறும்போது, “கடந்தாண்டு கோவிட் லோன் வாங்கிய 80 சதவீதம் பேர் திருப்பி செலுத்த வழியில்லாமல் திணறி வருகின்றனர். எனவே, தற்போதுள்ள சூழலில் தமிழக முதல்வர் எடுத்துள்ள முயற்சி வரவேற்புக்குரியது. மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிப்பதுடன், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்”என்றார்.

கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு கூறும்போது, “கரோனாவின் தாக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரை கடுமையாக பாதித்துள்ளது. கடன் தொடர்பாக ஏற்கெனவே தொழில் துறையினர் சார்பில் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இச்சூழலில், தமிழக முதல்வரும் முயற்சிகளை மேற்கொள்வதால் மத்திய அரசு நிச்சயமாக செய்துதரும் என நம்புகி றோம் முதல்வரின் இச்செயல்பாடு வரவேற்புக்குரியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x