

கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ஈரோட்டில் நாள்தோறும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தினசரி பாதிப்பில், கோவைக்கு அடுத்த இடத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. ஈரோடு மாநகராட்சி சார்பில் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் அதிகம் உள்ள 45 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்பகுதியில் வசிப்போருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து கொடுத்து வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியைப் பொருத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இத்துடன் 10 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் கரோனா பரிசோதனை நடந்து வருகிறது. மேலும், வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் குறித்த கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. இந்த வகையில், ஈரோடு நகரில் தற்போது 3 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்ட முடிவின்படி, நகர்பகுதியில் நாள்தோறும் 4 ஆயிரம் கரோனா பரிசோதனை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, தற்போது வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அவருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முடிவு வரும்வரை, அவர் தனிமையில் இருக்க வலியுறுத்தப்படுகிறது. இனிமேல் குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவருடன் தொடர்பில் உள்ள குடும்பத்தாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.