Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

ஊரடங்கு காலத்தில் மது விற்பனை : ஈரோட்டில் 336 வழக்குகளில் 339 பேர் கைது :

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலகட்டத்தில் மொத்தமாக 336 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை எடுத்து வந்து விற்பனை செய்வதைத் தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக – கர்நாடக மாநில எல்லையான ஆசனூரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கை நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

மே மாதம் முதல் தற்போது வரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடக அரசின் 6232 மது பாட்டில்கள் கைப்பற்றபட்டுள்ளது. மேலும், சாராயம் 28 லிட்டர், சாராய ஊரல் 480 லிட்டர் மற்றும் 10 இரு சக்கர வாகனங்களும் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்துடன், ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில், 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக 1216 மது பாட்டில்கள், 12 லிட்டர் சாராயம், 50 சாராய ஊரல், 13 இரு சக்கர வாகனங்களும் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து, ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலகட்டத்தில் மொத்தமாக 336 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்பட்டால், பொதுமக்கள் 96558-88100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x