

திருச்சி சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி சார்பில் ‘நுண்ணறிவைக் கொடுப்பது பரம்பரையா? அல்லது கல்வியா?’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பள்ளிச் செயலாளர் கே.மீனா தலைமை வகித்துப் பேசும்போது, “இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் கருத்துகளை மாணவர்கள் உள்வாங்கிக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். பள்ளி இயக்குநர் அபர்ணா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன் தொகுத்து வழங் கினார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது: கல்வி தான் மாணவர் களுக்கு உயர்வைத் தரும். அன்றைய காலக்கட்டத்தில் இல்லாத பாடப்பிரிவுகளும் கற்ப தற்கான வாய்ப்புகளும் தற்போது அதிகமாகவே உள்ளன. மாணவர் கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சியில் சாதிப்பதற்குப் பல துறைகள் உள்ளன. அதில் மாணவர்கள் முனைப்போடு செயல்பட்டால் வெற்றிகளைப் பெறலாம்.
நுண்ணறிவு என்பது பரம்பரை யாக வருவதல்ல, நாம் கற்கும் கல்வி, அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் ஆகியவற்றால் வருவது. விண்வெளித்துறை மட்டு மல்ல தன்னம்பிக்கை இருந்தால் பெண்கள் அனைத்துத் துறை களிலும் சாதிக்கலாம். அதற்கு இந்த பள்ளியின் செயலாளரே சிறந்த சான்று.
சிரமப்பட்டால் தான் சிகரத்தை அடைய முடியும். நாம் யார் என நிரூபிப்பதற்கு கல்வி மட்டுமே மூலதனம். எதிர்காலத்தில் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் ஆராய்ச்சி நிலையங்களில் அதிக அளவில் பெண்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
முன்னதாக பள்ளி முதல்வர் வி.பொற்செல்வி வரவேற்றார். நிறைவாக முதுநிலை முதல்வர் பத்மா னிவாசன் நன்றி கூறினார்.
இந்த கருத்தரங்கில் மதி இந்திரா காந்தி கல்லூரி, சந்தானம் வித்யாலயா, ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கரா மெட்ரிக் பள்ளி, மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா, ராஜாஜி வித்யாலயா மற்றும் அகிலாண்டேஸ்வரி வித்யாலயா ஆகியவற்றின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவி கள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.