Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவிடத்தில் - கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க வேண்டும் : இளைஞர்களிடையே அறிவுச் செயல்பாடுகளை ஊக்குவிக்க எழுத்தாளர்கள் விருப்பம்

கோவில்பட்டி

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அமைய உள்ள நினைவிடத்தில் ‘கரிசல் இலக்கிய ஆய்வு மையம்’ அமைக்க வேண்டும் என, எழுத்தாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் கரிசல் எழுத் தாளர்களின் தலைமையிடமாக கோவில்பட்டி திகழ்கிறது. கோவில் பட்டியைச் சேர்ந்த கு.அழகிரிசாமி, கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன் ஆகியோர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள் ளனர்.

கடந்த மாதம் மறைந்த கி.ராஜநாராயணின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. “அவர் படித்த பள்ளியை பழமை மாறாமல் புனரமைத்து, அதில் நூலகம் அமைக்கப்படும்.

கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை, நினைவிடம் அமைக்கப்படும்” என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள கோவில்பட்டி எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு மேலும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.

அதில், “கரிசல் பூமியின் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால வாழ்க்கையையும் ஆவணப் படுத்துவது, ஆய்வு செய்வது எதிர்கால தலைமுறைகளுக்கு கொடுக்கிற மிகப்பெரும் கொடை யாக இருக்கும். அதனால், கோவில்பட்டியில் அமைய உள்ள கி.ரா. நினைவிடத்தின் ஒரு பகுதியாக கரிசல் இலக்கிய ஆய்வு மையம் என்ற ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ வேண்டும். தமிழ் அறிவுப்பரப்பில் வெளிவந்துள்ள அத்தனை கலை இலக்கிய நூல்கள், ஆய்வு நூல்கள், சமூக நூல்கள், அரசியல் நூல்கள், தத்துவ நூல்கள் என்று முழுமையான நூலகத்தை உருவாக்க வேண்டும். வாரம்தோறும் அந்த நூலக அரங்கில் குறைந்த கட்டணத்தில் கருத்தரங்குகள், இலக்கிய கூட்டங்கள், எழுத்தாளர் சந்திப்புகள், பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதிப்பதின் மூலம் இளைஞர்களின் அறிவுச் செயல் பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.

வட்டார அளவில் தொடங்கி மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மண்ணின் மகத்தான படைப்பாளிகளான பாரதி, வ.உ.சி, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், காருக்குறிச்சி அருணாச்சலம், ஓவியர் கொண்டையராஜூ ஆகியோரின் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். இளைஞர்கள், மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், வேலை வாய்ப்பு பயிற்சிகளையும் நடத்த திட்ட மிடலாம். கலை இலக்கியத்தில் ஆர்வமுடைய மாணவர்கள், இளைஞர்களுக்கான பயிற்சி தரும் மையமாக செயல்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

அறிவுசார் மையம்

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச்செயலா ளர் க.உதயசங்கர் கூறும்போது, “ கரிசல் இலக்கியம் என, முதன் முதலில் வட்டார மொழியில் இலக்கியத்தை பதிவு செய்து, முன்னத்தி ஏராக கி.ராஜநாராயணன் இருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாஞ்சில் இலக்கியம், கொங்கு இலக்கியம், நடுநாட்டு இலக்கியம், தஞ்சை இலக்கியம் என பல பகுதி வட்டார மக்களின் வாழ்க்கையை குறித்த இலக்கியம் உருவானது. கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை அமைக்கும் போது, அதில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைத்தால் ஒரு அறிவுசார் மையமாக திகழும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x