

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் காப்பகத்தில் உள்ள யானை களுக்கு இன்று(ஜூன் 9) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தது. மேலும் 8 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பூங்காக்கள், காப்பகங்களில் இருக்கக்கூடிய விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வனத் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானை முகாமில் 28 யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் பராமரிக் கப்பட்டு வரும் 6 யானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வனத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சிறப்பு கால்நடை மருத்துவக் குழுவினர் இன்று (ஜூன் 9) இங்கு வந்து, யானை களிடமிருந்து சளி மாதிரிகளை சேகரிக்க உள்ளனர்.
மேலும், இக்காப்பகத்தில் உள்ள யானைப் பாகன்கள், உதவியாளர்கள், வனத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா கூறியது: எம்.ஆர்.பாளையம் காப்பகத்திலுள்ள 6 யானைகளிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக உத்தர பிரதேசத்திலுள்ள இந்திய கால்நடைகள் ஆராய்ச்சி நிறுவனத் துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மேலும் யானைகளின் நலன் கருதி இங்கு பணியாற்றுவோரைத் தவிர, பிற இடங்களில் பணியாற்றும் வனத் துறையினரோ அல்லது வெளியாட்களோ இந்த காப்பகத்துக்குள் அனுமதிக் கப்படுவதில்லை. மேலும் வெளியிலிருந்து யானைகளுக் கான உணவுப் பொருட்களை கொண்டு வரக்கூடிய தன்னார் வலர்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்றார்.