

கரோனா தொற்று பரவல் அதிகம் இருப்பதால் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியை அதிகப்படுத்த வேண்டும். கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருந்து கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
நேற்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த தளர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காலையில் இருந்து மாலை வரை கடைகள் திறந்திருக் கும்போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இது தொற்று பரவுவதற்கு வாய்ப்பாக இருக்கும். கரோனா பரவல் காலம் என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.