

தேர்தல் அறிக்கையில் ஈரோடு மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்ட 35 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முன்மொழிவினை, அரசுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத்துறைகளின் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:
தமிழக முதல்வர் தேர்தலுக்கு முன்னர் பெற்ற மனுக்களை, பதவியேற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள மனுக்கள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் அனைத்துத் துறைகளின் மூலம் முன்மொழிவு தயார் செய்து உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய 35 திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முன்மொழிவினை அரக்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அளவு படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தமிழக முதல்வருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புதுமையான திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும், மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் வகையிலும் திட்டங்களை வகுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகள் இருந்தது. தற்போது 1000 படுக்கைகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 382 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 400 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஏக்கம்ஜேசிங், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.