Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

தாழம்பூர் ஏரியில் கொட்டப்படும் கழிவுகள் : ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

தாழம்பூர் ஏரியில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தாழம்பூர் ஏரியில் கடந்த 3 ஆண்டுகளாக விதிகளை மீறி குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அந்த கழிவுகள் எரிக்கப்பட்டுவதால் காற்று மாசும் ஏற்படுகிறது. ஏராளமான புலம்பெயர் பறவைகள் இங்கு தங்கிச்செல்லும் நிலையில், இதுபோன்ற செயல்களால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு மாசுபடுத்தப்படும் ஏரியில் இருந்து நீர் எடுத்து பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இரு வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தாழம்பூர் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழு நேரில் ஆய்வு செய்து புகார் மீதான உண்மைத் தன்மை, புகார் உண்மை எனில் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இதர விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து, வழக்கு மீதான அடுத்த விசாரணை நாளான ஜூன் 30-ம் தேதிக்குள் ஆய்வறிக்கையை அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x