

கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனாதொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை அரசு செயலர் ஜெகநாதன்,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஆட்சியர்கள் கார்மேகம் (சேலம்), கதிரவன் (ஈரோடு), சேலம் மாவட்ட கரோனா தடுப்பு பணிகள் பொறுப்பு அலுவலர் முருகேசன், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கள் செல்வராஜ், நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, தலைமைச் செயலர் இறையன்பு தலைமை வகித்து பேசியதாவது:
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்திட,பொதுமக்கள் அனை வரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தயாரிக்கும் இடம் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களில் தேவையான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தொற்று தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் இடங்களில் புதிய களப்பணியாளர்களை உடனடியாக நியமித்து தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும். சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தேவைப்படும் உதவிகளை அரசுக்குஉடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.
முன்களப் பணியாளர்கள் தொற்றின் வீரியத்தை உணர்ந்து அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக் கூடாது. இதனை மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யப்படு வதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒருங்கி ணைந்து செயல்பட்டு சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றிட தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா,ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் தனி அலுவலர் (நிலம் எடுப்பு) லதா, சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.