Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

பாலியல் புகாரை விசாரிக்க பள்ளிகளில் தனிக்குழு : ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒரு சிலரின் இழி செயலால் ஆசிரியர் சமுதாயமே மிகப்பெரிய மனவேதனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஆசிரியர்- மாணவர் உறவு என்பது பெற்றோர்- குழந்தைகள் உறவைப் போன்றது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது போக்ஸோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வரவேற் கத்தக்கது.

இனிமேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் பெற்றோர்- ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், குழந்தை உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைத்து அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மாநில அளவில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை பெற்று, அவற்றை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x