குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை : தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை :  தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் குழந்தை திருமணங்கள் பரவலாக நடைபெறுவது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநில அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலர் களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி தவறாகும்.

இதுபோன்ற குறைந்த வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், ஊக்குவிப்பவர்கள் மீதும், திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளது குறித்து யாரேனும் தகவல்களை அறிந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொலைபேசி எண் 0461-232560, சைல்டு லைன் எண்1098, மகளிர் உதவி எண் 181 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in