

பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மழை நீரை துல்லியமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்காக பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு / குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனக்கருவி, தெளிப்பு நீர் கருவி, மற்றும் மழை நீர் தூவான் ஆகியவை அமைத்து தரப்படுகிறது.
விவசாயிகளுக்கு, பாதுகாப்பான பிர்க்காவில் குழாய் கிணறு அமைக்க 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. டீசல் பம்ப் செட் அல்லது மின் மோட்டார் நிறுவ 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
பைப் லைன் அமைக்க, தரை நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட, பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்ட மானியம் வழங்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு 3 ஆயிரத்து 915 ஹெக்டேருக்கு நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் சிறு / குறு விவசாயி சான்று, நில வரைபடம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.