

கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ளதைவிட அதிக கட்டணம்வசூலிக்கும் தனியார் மருத்துவ மனைகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம் என கோவைமாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்றுக்கு சிகிச்சைஅளிக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்கான சிகிச்சை கட்டணங்களை அரசு நிர்ணயித் துள்ளது. அரசு அறிவித்துள்ள தொகையைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது மாவட்ட நிர்வாகத்தின் கரோனா கட்டுப்பாடு மையத்தை 0422-1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மேலும், covidcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 9488440322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின்கீழ் தொடர்புடைய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.