Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

சேலம் அரசு மருத்துவமனையில் - அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தும் பணி தீவிரம் :

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மக்களுக்கு கரோனா தடுப்பூசிபோடும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர் களில் பலர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். இதனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் வசதியுடன் 835 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில், தற்போது ஆக்சிஜன் வசதியற்ற 158 படுக்கைகள் உள்ளன. நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மீதமுள்ள 158 படுக்கைகளுக்கும், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் செறிவூட்டிகள் தற்போது 285 உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்களும் புதிதாக 75 வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு, ஆக்சிஜன் வசதியற்ற படுக்கைகளை, ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றி, மருத்துவமனையில் மொத்தம் உள்ள 1,258 படுக்கைகளையும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றப்படுகிறது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x