

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மது பதுக்கல், பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தல் ஆகியவற்றை தடுக்க சேலம் மாவட்ட போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவிலிருந்து சேலம் வழியாக பல்வேறு இடங்களுக்கு லாரிகளில் மது கடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேலம் கருப்பூரில் உள்ள சுங்கச் சாவடியில் போலீஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது தனியார் பார்சல் நிறுவன லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.3.37 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த அதே நிறுவனத்தின் மற்றொரு லாரியிலும் மதுபாட்டில்கள் இருந்தது.
இதுபோல தனியார் லாரியிலும் மது கடத்தப்பட்டிருந்தது. 3 லாரிகளிலும் மொத்தம் ரூ.4.45 லட்சம் மதிப்புள்ள 6,722 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுபாட்டில்களை கடத்தி வந்த சேலம் பெரியபுதூரைச் சேர்ந்த ராபர்ட், பெங்களூரைச் சேர்ந்த இளங்கோ, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சசி, தர், திருவாரூரைச் சேர்ந்த ராஜேஸ் குமார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், தமிழகத்தில் இருந்து கூரியர் பார்சல்களை, கர்நாடகாவில் இறக்கிவிட்டு அங்கிருந்து தமிழகம் வரும்போது, லாரிகளில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.