

மும்பை பி.டி.சாலை பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் ஷா மகன் மித்துல் ஷா(38). இவர், மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தில் திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த கோபிநாத்(39) ரூ.20 லட்சம் முதலீடு செய்திருந்தார். இந்த பணத்தை மித்துல் ஷா திருப்பித் தரவில்லை.
இந்நிலையில் மித்துல் ஷா கடந்த மே 14-ம் தேதி திருச்சி வந்து, மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
அப்போது கோபிநாத்தும், அவரது நண்பரான சென்னை திருவேற்காடு தம்புசாமி நகரைச் சேர்ந்த முனியப்பனும்(43) அவரைச் சந்தித்து, பணத்தை திருப்பி தருமாறு கூறி அவரை தாக்கியதுடன், உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்த முயற்சித்துள்ளனர். பின்னர் அவரை விடுதியிலிருந்து வெளியே விடாமல் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மித்துல் ஷாவை 2 பேரும் நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்ல முயன்றனர். அப்போது மித்துல் ஷா சப்தமிட்டதால் அருகி லிருந்த போலீஸார் ஓடிவந்து அவரை மீட்டனர்.
அவரது உடலில் காயங்கள் இருந்ததால், உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கோபிநாத், முனியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.