

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் கார் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக சுத்தமல்லி அணைக்கட்டு மற்றும் பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அணை மூலம் தாமிரபரணி ஆற்றிலிருந்து 8 அணைக்கட்டுகள், அதன்கீழுள்ள 11 கால்வாய்கள் வழியாக கிடைக்கும் தண்ணீர் மூலம் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் வடக்குகோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் என, 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அவ்வாறு குறிப்பிட்ட காலத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வாண்டு ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்தசில நாட்களுக்குமுன் கார் சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர்திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாசனத்துக்காக பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மு. அப்துல் வகாப் பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவைத்தார்.
இதுபோல, திருநெல்வேலியை அடுத்துள்ள சுத்தமல்லி அணைக்கட்டிலிருந்து திருநெல்வேலி கால்வாயில் விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார்.